கள்ளக்காதலனுடன் சேர்ந்து 2 வயது குழந்தையை கொலை செய்த இளம்பெண்...!

தாராபுரம் அருகே 2 வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-12-22 05:46 GMT

கோவை,

தாராபுரம் அருகே 2 வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். அண்டாவில் விழுந்து குழந்தை இறந்து விட்டதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளக்காதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தை அடுத்த முண்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 22). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அனிதா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இதன் விளைவாக அனிதா கர்ப்பமானார்.

அதன்பின்னர் அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அனிதாவுக்கு வயது 17 என்பதால் போலீசார் மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தை பிறந்த பின்னர் அந்த குழந்தைக்கு தினேஷ் என்று பெயர் வைத்து அனிதா வளர்த்து வந்தார்.

திருமணம்

இந்த நிலையில் தனது குழந்தையுடன் அடிக்கடி அனிதா உடுமலை பகுதிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அனிதா, அவரிடம் தனக்கு குழந்தை இருப்பதை கூறி, அவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் அனிதா தனது குழந்தை தினேசுடன் உடுமலையில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

பின்னர் அனிதா 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பிரவசத்திற்காக முண்டுவேலம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர் உடுமலைக்கு போகாமல் முண்டுவேலம்பட்டியில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது மறுபடியும் தனது காதலன் மோகன்ராஜூடன் அனிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டு ஒன்றாக இருந்துள்ளனர்.

திடுக் தகவல்

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி குழந்தை தினேஷ் அண்டா தண்ணீரில் திடீரென்று பிணமாக மிதந்தான். இது குறித்து போலீசார் வந்து விசாரித்தபோது, தினேஷ் அண்டாவுக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக அனிதா கூறியுள்ளார். ஆனால் அனிதா குடியிருந்த வீட்டின் அருகில் வசித்த ஒருவர், குழந்தை தினேஷ் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அனிதாவுக்கும், அவளுடைய கள்ளக்காதலன் மோகன்ராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் புகார் கொடுத்தார்.

கொலை செய்தது அம்பலம்

உடனே இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது (பொறுப்பு) அனிதாவையும், கள்ளக்காதலன் மோகன்ராஜையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தார். விசாரணையில் அவர்கள் கூறிய தகவல் போலீசாரை திடுக்கிட வைத்தது. இவர்கள் மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், குழந்தை தினேசிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்தால் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என நினைத்து, குழந்தையை கொல்ல அனிதாவும், ேமாகன்ராஜூம் முடிவு செய்துள்ளனர். அந்த திட்டத்தை நிறைவேற்ற கள்ளக்காதலன் மோகன்ராஜை தான் தங்கி இருந்த வீட்டிற்கு அனிதா வரவழைத்துள்ளார். அங்கு அவர் வந்ததும் குழந்தை தினேசை கழுத்தை நெரித்து கொன்று, உடலை அண்டாவுக்குள் போட்டு விட்டு, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்ததாக நாடகம் ஆடியதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கள்ளக்காதலனுடன் இளம் பெண் கைது

இதைத் தொடர்ந்து அனிதா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்