இளம்பெண் மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-31 18:45 GMT

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். மேலும் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.8 ஆயிரம் மதிப்பிலான காது கேளாதோர் கருவிகளை சிவசைலம் காதுகேளாதோர் பள்ளியைச் சேர்ந்த 3 பேருக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

பெண் தீக்குளிக்க முயற்சி

புளியங்குடி வாவா ராவுத்தர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மனைவி துரை மீரா (வயது 36) என்பவர் தனது மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு, மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தனது தலையிலும், தனது மகளின் தலையிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ஓடி வந்து தலையில் தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் துரை மீராவை மனு கொடுக்க செய்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

எனது கணவருக்கு திருமணத்தின்போது வரதட்சனையாக நகை, பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் நான் குழந்தை பெற்ற பிறகு அழகாக இல்லை என்று கூறி வேறு திருமணம் செய்து கொண்டார். என்னை தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பலமுறை போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து கணவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மாணவ-மாணவிகள் ஊர்வலம்

கடையநல்லூர் தாலுகா ராமசாமியாபுரம் கீழூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக கோஷமிட்டபடி வந்தனர். அப்போது அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் பல ஆண்டு காலமாக உள்ள மண் சாலையை பக்கத்து நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் சொந்த நிலம் என்று ஆக்கிரமித்து விட்டனர். அந்த பாதையில் உள்ள தெருவிளக்கு மற்றும் குடிநீர் இணைப்பு ஆகியவற்றையும் ஆக்கிரமித்து விட்டனர். எங்கள் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்டவர்கள் இந்த பாதையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். எனவே இந்த பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டு உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்