மேச்சேரி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு
மேச்சேரி கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டது.
மேச்சேரி,
2-வது மனைவி
மேச்சேரி அருகே நங்கவள்ளி பஸ் நிலையம் அருகில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 50). இவருடைய 2-வது மனைவி அமுதவள்ளி (33). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன்- மனைவி இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த அமுதவள்ளி வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
அவரை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அமுதவள்ளி பரிதாபமாக இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சாலைமறியல்
இதற்கிடையே அமுதவள்ளியின் மகனுக்கு எதிர்கால வாழ்வாதாரம் வேண்டுமென அமுதவள்ளியின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் நங்கவள்ளி- ஜலகண்டபுரம் சாலையில் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அமுதவள்ளியின் உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.