கணவர் பேசாததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
அஞ்சுகிராமம் அருகே கணவர் பேசாததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ெசய்து கொண்டார்.;
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே கணவர் பேசாததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ெசய்து கொண்டார்.
முடிதிருத்தும் தொழிலாளி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 34), முடி திருத்தும் தொழிலாளி. இவருக்கும் புளியங்குடியைச் சேர்ந்த திவ்யா (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய மகள் செல்வ யாழினி (2).
சாமிதுரை குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ஜேம்ஸ் டவுனில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார். இதற்காக அந்த பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.
மனைவியுடன் தகராறு
சம்பவத்தன்று இரவு சாமிதுரை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது மனைவியும் குழந்தையும் தூங்கி கொண்டிருந்தனர். திவ்யா தூங்க சென்ற போது கதவை பூட்ட மறந்ததாக தெரிகிறது.
இதையடுத்து சாமிதுரை திவ்யாவை எழுப்பி 'இரவில் கதவை திறந்து போட்டு விட்டு தூங்கி விட்டாயே' என்று கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சாமிதுரை மனைவியிடம் பேசாமல் இருந்தார்.
தற்கொலை
இதனால் மனமுடைந்த திவ்யா கடந்த 13-ந் தேதி வீட்டில் வைத்திருந்த டீசலை எடுத்து தன்மீது ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை கணவர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு திவ்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திவ்யாவின் தந்தை மாடக்கண்ணு அஞ்சுகிராம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
கணவர் பேசாததால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அஞ்சுகிராமம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.