முகத்தில் கரியை பூசி நூதன போராட்டம் நடத்திய வாலிபர்

ஈசாந்திமங்கலம் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முகத்தில் கரியை பூசி நூதன போராட்டம் நடத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-08-21 18:45 GMT

நாகர்கோவில்:

ஈசாந்திமங்கலம் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முகத்தில் கரியை பூசி நூதன போராட்டம் நடத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலிபர் தர்ணா

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு வாலிபர் மனு அளிக்க வந்தார். அப்போது அவர் தனது முகத்தில் கரியை பூசிக்கொண்டு, நெற்றியில் பெரிய நாமத்தை போட்டு பார்ப்பதற்கு வினோதமாக காட்சியளித்தார்.

இதை பார்த்தும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் போலீசாரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அத்துடன் அங்கு கோஷம் எழுப்பினார்.

சுடுகாட்டிற்கு பாதை இல்லை

உடனே அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர் கூறியதாவது:-

எனது பெயர் கார்மேகம் (வயது35). நான் மக்கள் பாதுகாப்பு அமைப்பு நிறுவன தலைவராக உள்ளேன். எனது சொந்த ஊர் திருப்பூர். தற்போது உறவினர்களுடன் தோவாளை ஈசாந்திமங்கலம் பகுதியில் வசித்து வருகிறேன். ஈசாந்திமங்கலம் அண்ணா காலனி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். எங்கள் ஊருக்கென்று பொது சுடுகாடு தம்பிரான் குளம் என்ற களன் தேவன் குளத்தின் கரையில் அரசால் கட்டித் தரப்பட்டுள்ளது.

ஆனால் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை இல்லை. இதனால் நாங்கள் வயல் வரப்பு வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது. இதனால் எங்களது ஊர் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இங்கு பாதை அமைத்து தர கோரி ஈசாந்திமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே மாவட்ட கலெக்டரிடம் இது தொடர்பாக மனு அளிக்க வந்துள்ளேன். எனவே பொதுமக்களின் நலன் கருதி சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து கான்கிரீட் சாலை அமைக்க தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர் அவர் கூறினார்.

தொடர்ந்து இந்த கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனுவும் அளித்தார்.

முகத்தில் கரியை பூசி வாலிபர் நடத்திய நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்