எண்ணூரில் செல்போன் செயலி மூலம் கடன் வாங்கிய தொழிலாளி தற்கொலை
செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எண்ணூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதி 67-வது பிளாக்கில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவருடைய மகன் கன்னியப்பன்(வயது 27). இவர், திருவொற்றியூரில் உள்ள தனியார் பருப்பு ஆலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர், செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இக்கடனை திருப்பி செலுத்தாததால் கடன் வழங்கிய செல்போன் செயலி நிறுவனத்தின் ஊழியர்கள், கடனை திருப்பிகேட்டு தொடர்ந்து கன்னியப்பனை மிரட்டி வந்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கன்னியப்பன், நேற்று முன்தினம் தனது வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த எண்ணூர் போலீசார், கன்னியப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை திரு.வி.க.நகர் அடுத்த வெற்றி நகர் அய்யாவு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (35). இவர், அண்ணா நகரில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கார்த்திக்கின் மனைவி, தனது குழந்தையுடன் அவருடைய தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.