காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்

பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-10-19 01:15 IST


பந்தலூர் அருகே சேரங்கோடு, படச்சேரி, திருவள்ளுவர்நகர், எலியாஸ்கடை, குறிஞ்சிநகர் உள்பட பல பகுதிகளில் காட்டுயானைகள் புகுந்து தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட ப யிர்களை உடைத்து மிதித்து நாசம் செய்து வருகிறது. மேலும் வீடுகளையும் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு படச்சேரி கிராமத்திற்குள் 2 காட்டுயானைகள் புகுந்தது. அப்போது படச்சேரியை சேர்ந்த தொழிலாளியான மணிமாறன் (வயது 51) என்பவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார்.


அப்போது புதர் மறையில் நின்ற காட்டு யானைகளில் ஒன்று அவரை

தும்பிகையால் தாக்கியது. இதனால் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மேலும் அவர் கூச்சலிட்டார். இதனால் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் தீப்பந்தங்கள் காட்டி, காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.

இதையடுத்து காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த மணிமாறனை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


இந்த நிலையில் பொதுமக்கள், காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை கண்டித்தும், தொழிலாளியை யானை தாக்கியதை கண்டித்தும், பந்தலூர்- கோழிக்கோடு சாலையில் எலியாஸ் கடை பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள், வனத்துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள், ஊருக்குள் புகுந்து அட்டகாகத்தில் ஈடுபட்டு வரும் காட்டுயானைகளை கும்கி யானைகளின் உதவியுடன் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டவேண்டும். அரசு தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் காடுகள் போல் வளர்ந்துள்ளதால் வனவிலங்குகள் நின்றால் தெறிவதில்லை. அதனால் அதனை அகற்றவேண்டும். தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அகழி வெட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்