தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி படுகொலை
தூத்துக்குடியில் குடிபோதையில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளியை படுகொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.;
தூத்துக்குடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கூலி தொழிலாளர்கள்
தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 45). தூத்துக்குடி சில்வர்புரத்தைச் சேர்ந்தவர் திருமணி மகன் மாரிமுத்து (37). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
இவர்கள் அடிக்கடி தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி சென்று, அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.
தலையில் கல்லைப்போட்டு...
அதன்படி நேற்று மதியம் பூல்பாண்டியும், மாரிமுத்துவும் சின்னகண்ணுபுரம் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே குடி போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூல்பாண்டி அங்கு கிடந்த சிறிய கல்லை எடுத்து மாரிமுத்து மீது வீசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் தன்னை கொல்லுமாறு மாரிமுத்துவிடம் கூறிக் கொண்டே இருந்தார்.
அப்போது ஆத்திரமடைந்த மாரிமுத்து அங்கு கிடந்த பெரிய கல்லை தூக்கி பூல்பாண்டியின் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பூல்பாண்டி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நண்பர் கைது
பின்னர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்ற மாரிமுத்து, அங்கிருந்தவர்களிடம் தனது நண்பரின் தலையில் கல்லை தூக்கி போட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஹென்சன் பவுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த பூல்பாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் தலையில் கல்லைப்போட்டு நண்பரே படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-----