மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
நத்தத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நத்தத்தில், சேர்வீடு பிரிவு பகுதியில் அவர் வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பலியான சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து, மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.