ஆரணி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
ஆரணி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதமாகியும் குணமாகாததால் கலெக்டரிடம் பெண்ணின் தாய் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.
ஆரணி
ஆரணி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதமாகியும் குணமாகாததால் கலெக்டரிடம் பெண்ணின் தாய் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.
பிரசவத்துக்கு அனுமதி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ்- குமாரி தம்பதிக்கு 6 மகள்கள் உள்ளனர்.
இதில் 2 மகள்கள் மாற்றுத்திறனாளிகள். 5 மகள்களுக்கு திருமணம் ஆகியுள்ளது. மாற்றுத்திறனாளியான ராஜேஸ்வரிக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை.
குமாரியின் மகள் ஜெயந்திக்கும் (வயது 27) பெங்களூருவை சேர்ந்த ராம்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ஜெயந்தி தலைப்பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்தார். கடந்த மே மாதம் 21-ந் தேதி காலை 6 மணிக்கு பிரசவத்துக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துதான் பிரசவம் பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆண் குழந்தை
அறுவை சிகிச்சை செய்யப்பட்டபிறகு ஜெயந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த சற்று நேரத்திலேயே ஜெயந்தி கோமா நிலைக்கு சென்றார். உடனடியாக மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர், செவிலியர், உதவியாளர் ஆகியோர் இணைந்து சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அன்று முதல் இன்று வரை ஜெயந்தி தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையிலேயே இருந்து வருகிறார்.
கண்ணீர் மல்க புகார்
இதுகுறித்து ஜெயந்தியின் தாய் குமாரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேசிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகாரில் எனது மகள் கோமா நிலைக்கு செல்தற்கு ஆரணி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்கள், செவிலியர், உதவியாளர்கள் தான் காரணம் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகளையும் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடமும் கோரிக்கை மனு குமாரி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மமதா கூறுகையில், ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்திருந்த ஜெயந்திக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.
அப்போது திடீரென ஜெயந்திக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு கோமா நிலையை அடைந்தார். உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறோம்.
இது யாருடைய தவறும் அல்ல. நாங்கள் தொடர்ந்து அவரை கவனித்து வருகிறோம் என்றார்.