பக்தர்கள் கூட்டத்தில் மோட்டார் சைக்கிள் புகுந்ததில் பெண் பலி

பக்தர்கள் கூட்டத்தில் மோட்டார் சைக்கிள் புகுந்ததில் பெண் உயிரிழந்தார்.

Update: 2023-04-01 18:36 GMT

மோட்டார் சைக்கிள் புகுந்தது

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, திருவாளந்துறை கிராமத்தை சேர்ந்த 13 பக்தர்கள் நேற்று அதிகாலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தீரன் நகர் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதே சாலையில் வெங்கலம் கிராமத்தை சேர்ந்த தமிழரசனின் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்களின் கூட்டத்துக்குள் புகுந்து, பெண் பக்தர்கள் மீது மோதியது.

பெண் சாவு

இதில் திருவாளந்துறையை சேர்ந்த கணேசனின் மனைவி பொன்னம்மாள் (50), தங்கராசுவின் மனைவி கவிதா (36), கண்ணனின் மனைவி ராணி (50), திருவாளந்துறை ராம்ஜி நகரை சேர்ந்த மணிகண்டனின் மனைவி லதா (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மேல் சிகிச்சைக்காக ராணியும், கவிதாவும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லதா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்