பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை மறித்த ஒற்றை யானை - காட்டுக்குள் ஓடி உயிர் தப்பினர்
பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை ஒற்றை யானை மறித்ததால் காட்டுக்குள் ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;
திருப்பத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஜவ்வாதுமலைக்கு வந்தார். இன்று அவர் ஜமுனாமரத்தூர் அடுத்த குனிகாந்தூர் பகுதியில் உள்ள ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதற்காக அந்த பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் நேற்று மாலை கவர்னருக்கு வரவேற்பு அளிப்பதற்காக தங்களது பெற்றோர்களுடன் சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் சொந்த கிராமமான ஜவ்வாது மலைகளில் உள்ள புதூர் நாடு, வசந்தபுரம் பகுதிக்கு ஜீப்பில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஜீப்புக்கு முன்னால் மாணவர்களின் பெற்றோர் சிலர் 2 பைக்குகளில் சென்றனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், காவலூர் அடுத்த வசந்தபுரம் பகுதியில் ஜீப் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒற்றை காட்டு யானை மாணவர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது. காட்டு யானையை பார்த்ததும் மாணவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி, அலறி அடித்துக்கொண்டு காட்டுப் பகுதிக்குள் தப்பித்து ஓடினர். பைக்கில் வந்தவர்களும் காட்டுப் பகுதிக்குள் ஓடினர்.
இதையடுத்து அந்த யானை அவர்கள் வந்த பைக்குகளை மிதித்து சேதப்படுத்தியது. பின்னர் மாணவர்கள் வந்த ஜீப்பையும் கவிழ்த்து ஒரு பள்ளத்தில் தள்ளியது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காட்டுப்பகுதியில் இருந்த 22 மாணவர்களையும் பத்திரமாக மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.