குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானை
சேரம்பாடியில் டேன்டீ தொழிலாளர்களின் குடியிருப்புகளை காட்டு யானை சேதப்படுத்தியது.;
பந்தலூர்,
சேரம்பாடியில் டேன்டீ தொழிலாளர்களின் குடியிருப்புகளை காட்டு யானை சேதப்படுத்தியது.
மேற்கூரைகள் சேதம்
பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண்.1-ல் அரசு மூலம் கட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையே காட்டு யானைகள் தினமும் குடியிருப்புக்குள் புகுந்து வருகின்றன. சில நேரங்களில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை துரத்தி வருகிறது. மாலையில் பள்ளி, கல்லூரி சென்று விட்டு வீடு திரும்பும் மாணவர்களை துரத்துவதால் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி டேன்டீ தோட்டத்துக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அங்கு தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புகளின் மேற்கூரைகளை தும்பிக்கையால் உடைத்து சேதப்படுத்தியது. மேலும் யானை தும்பிக்கையை குடியிருப்புக்குள் விட்டு, பாத்திரங்களை தூக்கி வெளியே வீசி சூறையாடியது.
வனத்துறையினர் கண்காணிப்பு
அப்போது தொழிலாளி வேலு என்பவர் மட்டும் வீட்டில் தனது குடும்பத்தினருடன் இருந்தார். அவர்கள் அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
மற்ற தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலிசெய்து விட்டு, வேறு குடியிருப்புகளுக்கு சென்று விட்டனர். தொடர்ந்து காட்டு யானை அதே பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல் பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் அரசு பஸ்கள், வாகனங்களை வழிமறித்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தேயிலை தொழிற்சாலை அருகே, அரசு தேயிலை தோட்ட ஆஸ்பத்திரியை காட்டு யானை முற்றுகையிட்டது. இதனால் நோயாளிகள், நர்சுகள் பீதி அடைந்துள்ளனர்.