பள்ளியை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம்
வால்பாறை நல்லமுடி எஸ்டேட்டில் பள்ளியை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறை நல்லமுடி எஸ்டேட்டில் பள்ளியை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
காட்டு யானைகள்
வால்பாறை வனப்பகுதியில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவுத்தேடி அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் பொதுமக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆனைமுடி, நல்லமுடி எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு நின்று வந்தன. இந்த யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு நல்லமுடி எஸ்டேட் வழியாக ைஹபாரஸ்ட் எஸ்டேட் பகுதிக்கு சென்றுள்ளது.
பள்ளியை சேதப்படுத்தியது
இதில் கூட்டத்தில் இருந்து தவறி சென்ற காட்டு யானை ஒன்று நல்லமுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து காட்டு யானை, தலைமை ஆசிரியர் அறையின் கதவு மற்றும் ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. பின்னர் அங்கிருந்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
காலையில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பொருட்கள் வெளியே கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அங்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பொதுமக்கள் பீதி
இதேபோல நல்லமுடி எஸ்டேட் வழியாக ைஹபாரஸ்ட் எஸ்டேட்டுக்கு சென்ற காட்டு யானைகள் ஹைபாரஸ்ட் தோட்ட அலுவலகத்தையும் உடைத்து, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. தொடர்ந்து காட்டு யானைகள் கடலப்பாறை எஸ்டேட் வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு அந்த பகுதியில் முகாமிட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் தனியே வெளியே வரக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.