விளைநிலங்களில் முகாமிட்ட காட்டு யானை

கொடைக்கானல் பகுதியில் விளைநிலங்களில் காட்டு யானை முகாமிட்டுள்ளது.

Update: 2023-07-18 16:34 GMT

கொடைக்கானல் பகுதியில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், இட்லி ஓடை, வயல்வெளி ஆகிய இடங்களில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இது, அங்குள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விளைநிலங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைக்கருத்தில் கொண்டு மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில், வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறை ஊழியர்கள் 25 பேர், 4 குழுக்களாக பிரிந்து நேற்று காலை 11 மணி முதல் மாலை வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பட்டாசுகளை வெடித்தும், சத்தங்களை எழுப்பியும் விரட்டினர். இதன் காரணமாக பழனி வனப்பகுதிக்குள் சென்று, யானை கூட்டத்தோடு ஒற்றை யானையும் சேர்ந்து விடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்