பெண்ணை துரத்தி சென்று தாக்கிய காட்டு யானை

பேரணாம்பட்டு அருகே காட்டுயானை ஒன்று பெண்ணை துரத்தி சென்று தாக்கியது. இதில் அவர் காயத்துடன் உயிர்தப்பினார். முன்னதாக விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

Update: 2023-04-12 18:42 GMT

காட்டு யானை அட்டகாசம்

பேரணாம்பட்டு வனசரகம் பத்தலப்பல்லி, சேராங்கல், எருக்கம்பட்டு, கோட்டையூர், அரவட்லா வனப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்கள், வாழை, மாந்தோப்புகளில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் அந்த ஒற்றை யானை நேற்று முன்தினம் நள்ளிரவு பத்தலப்பல்லி அணை திட்ட பகுதியில் நுழைந்தது.

அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து வாழை மரங்களை பிடுங்கி ருசித்தும், நெற்பயிர், தக்காளி தோட்டங்களை மிதித்து சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. பின்னர் பத்தலப் பல்லி சின்ன ஆறு வழியாக எருக்கம்பட்டு வனப்பகுதிக்குள் நேற்று அதிகாலை புகுந்து பிளிறியவாறு அட்டகாசம் செய்து சுற்றித் திரிந்தது.

துரத்தி சென்று தாக்கியது

எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் அறுவடை நடந்து வருவதால் கோபால் தனது மனைவி கோகிலா (வயது 51) மற்றும் தொழிலாளர்களுடன் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். கோகிலா தனது விவசாய நிலத்திலிருந்து வீட்டிற்கு ஒற்றையடி பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியிலிருந்து ஒற்றை யானை பயங்கர சத்தத்துடன் பிளிறியவாறு அங்கிருந்த 4 கல்கம்பங்களை உடைத்து சேதப்படுத்தியதோடு, எதிரே நடந்து வந்து கொண்டிருந்த கோகிலாவை துரத்தி துதிக்கையால் தாக்கியது. இதில் கோகிலா மயிரிழையில் உயிர் தப்பி படுகாயமடைந்து கூச்சலிட்டவாறு அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தார். யானை சத்தம் கேட்டு விவசாய நிலத்திலிருந்த கோகிலாவின் கணவர் கோபால் மற்றும் தொழிலாளர்கள் ஓடி வந்து கோகிலாவை மீட்டு, பட்டாசு, பாணம், வெடி வெடித்து யானையை விரட்டினர்.

படுகாயமடைந்த கோகிலா உடனடியாக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிடிக்க வேண்டும்

யானை தாக்கிய சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனச் சரகர் சதீஷ் குமார், மற்றும் வனத்துறையினர் பேரணாம்பட்டு போலீசார் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கிராம மக்கள், விவசாயிகள் கூறுகையில் ஒற்றை யாைன தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு, தற்போது பெண்ணை துரத்தி தாக்கியுள்ளது. இதனால் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் அஞ்சி வாழ்கிறோம். கும்கி யானை மூலம் ஒற்றை காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்