வாகன ஓட்டிகளை விரட்டிய காட்டு யானை
அஞ்செட்டி அருகே சாலையில் நின்ற காட்டு யானை வாகன ஓட்டிகளை விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.;
தேன்கனிக்கோட்டை
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் தனித்தனியாக பிரிந்து வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் அஞ்செட்டி அருகே பனை காப்புக்காட்டில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை காப்புக்காட்டில் இருந்து வெளியேறி அஞ்செட்டி குந்துக்கோட்டை செல்லும் சாலையில் நின்றது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு யானை செல்லும் வரை காத்திருந்தனர்.
வாகன ஓட்டிகளை விரட்டியது
அப்போது யானை திடீரென சாலையில் நின்ற வாகன ஓட்டிகளை விரட்டியது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்து வாகனத்தில் வேகமாக அங்கிருந்து சென்று உயிர் தப்பினர். ஆயினும் விடாமல் யானை சிறிது தூரம் வாகன ஓட்டிகளை விரட்டி சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது யானை அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். சாலையில் நின்ற காட்டு யானை வாகன ஓட்டிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.