மதுரையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு
மதுரையில் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு சென்ற ரெயில் பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
மதுரை,
மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.16721) தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு கோவை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில்(வ.எண்.16722) கோவையில் இருந்து தினமும் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இதற்கிடையே, கோவையில் இருந்து இன்று மதியம் புறப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை ரெயில் நிலையத்துக்கு இரவு 7.40 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரெயில் மீண்டும் நாளை (வியாழக்கிழமை) காலை மதுரையில் இருந்து கோவை புறப்பட்டு செல்ல வேண்டும். இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு சென்று சக்கரங்கள், பிரேக்குகள், பெட்டிகள் ஆகியவற்றை சரிபார்ப்பது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ரெயிலை ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு செல்வதற்காக இன்று இரவு 8.30 மணிக்கு மதுரை ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து ரெயில் ஓட்டிச் செல்லப்பட்டது.
அப்போது தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயிலின் கடைசி பெட்டியான, கார்டு பெட்டியின் ஒரு சக்கரம் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. இதனால் அந்த ரெயிலை அங்கிருந்து இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து, மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், ரெயில்நிலையத்தில் உள்ள அபாய சங்கும் ஒலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அனைத்து பிரிவு பணியாளர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ரெயில் பெட்டி மீண்டும் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.