தோடர் இன மக்களின் பாரம்பரிய திருவிழா

ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின்னர் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய திருவிழாவை கொண்டாடினர்.;

Update: 2023-01-27 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின்னர் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய திருவிழாவை கொண்டாடினர்.

தோடர் இன மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், கோத்தர், குறும்பர், பனியர், காட்டுநாயக்கர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் அவர்களது திருவிழாக்கள் மற்றும் ஊர் நிகழ்ச்சிகள் விசேஷமாக இருக்கும்.

இந்த நிலையில் ஊட்டி அருகே தாரநாடு மந்து பகுதியை சேர்ந்த தோடர் இன மக்களின் பாரம்பரிய கோவில் சோலூர் அருகே ஓல்கோடு மந்தில் உள்ளது. ஆவுல் என்ற புல் மற்றும் பெரம்பு ஆகியவற்றை கொண்டு அமைக்கப்பட்டு உள்ள இந்த கோவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு விழா நடத்தபட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இந்த கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், புற்களை மாற்றும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது.

30 நாட்கள் விரதம்

அதற்காக 30 நாட்கள் விரதம் இருந்த தோடர் இன ஆண்கள் அப்பர்பவானி பகுதிக்கு சென்று ஆவுல் என்ற புற்களையும், மசினகுடிக்கு சென்று பெரம்பு, மூங்கில் போன்றவற்றையும் எடுத்து வந்து கோவிலின் கூறையை மாற்றி புதுப்பித்து வந்தனர். பணிகள் முடிந்த நிலையில் பொள்சி என்று அழைக்கப்படும் திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி தோடர் இன ஆண்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து வந்து பிறை வடிவிலான கோவிலின் முன்பு மண்டியிட்டு வணங்கினர். கோவில் வாயிலின் முன்புறத்தில் பாரம்பரிய நடனத்தை மூத்த தோடர் இன ஆண்கள் ஆடினர்.

இதன் பின்னர் புல்வெளியில் தோடர் இன ஆண்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்து வட்டமாக நின்று பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். பெண்களுக்கு இந்த கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. காலம் காலமாக கலாசாரம் மாறாமல் தங்களது முன்னோர்களை பின்பற்றிய பாரம்பரிய முறைகளை தற்போதும் தோடர் இன மக்கள் கடைபிடித்து கொண்டாடினர். 

Tags:    

மேலும் செய்திகள்