சாலையோர பள்ளத்தில் இறங்கிய சுற்றுலா பஸ்

உச்சிப்புளி அருகே சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பஸ் இறங்கியது. இந்த விபத்தில் அய்யப்ப பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;

Update: 2023-01-07 18:45 GMT

பனைக்குளம், 

உச்சிப்புளி அருகே சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பஸ் இறங்கியது. இந்த விபத்தில் அய்யப்ப பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சபரிமலை சீசன்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கார், வேன், பஸ்கள் மூலம் கடந்த 2 மாதமாக ராமேசுவரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சுற்றுலா பஸ் ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

சாலையோர பள்ளத்தில் இறங்கிய பஸ்

இவர்கள் வந்த பஸ் நேற்று அதிகாலை நேரத்தில் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் சாலையில் ராமேசுவரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

பள்ளத்தில் இருந்த சிறிய மரம் மற்றும் செடிகளில் மோதி நின்றது பள்ளத்தில் இறங்கியதால் பஸ்சின் முன் பகுதி கண்ணாடி உடைந்தும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த டிரைவர் உள்ளிட்ட சில அய்யப்ப பக்தர்கள் லேசான காயம் அடைந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த அய்யப்ப பக்தர்களை உச்சிப்புளி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து பொக்லைன் மற்றும் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இறங்கி நின்ற பஸ் போலீசார் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டு சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்