தொகுதிக்கு ஆயிரம் இளைஞர்களை திரட்ட வேண்டும்; அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

தென்காசியில் வருகிற 5-ந் தேதி நடைபெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தொகுதிக்கு ஆயிரம் இளைஞர்களை திரட்ட வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

Update: 2023-08-29 18:45 GMT

தென்காசியில் வருகிற 5-ந் தேதி நடைபெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தொகுதிக்கு ஆயிரம் இளைஞர்களை திரட்ட வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி தென்காசிக்கு வருகிறார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியிலும், அதனை தொடர்ந்து அதே வளாகத்தில் இளைஞர் அணியினர் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

இதுதொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று இசக்கி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தீர்மானங்களை வாசித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வரவேற்றார்.

சிறப்பான முறையில்...

கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தின் வருங்காலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி தென்காசிக்கு வருகிறார். அவர் முதன்முதலாக தென்காசிக்கு வருகிறார். அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். நமக்கு கட்சிதான் முக்கியம். கட்சியின் தலைமை என்ன கூறுகிறதோ அதனை கேட்க வேண்டும். கட்சியில் பொறுப்புகள் வரும். பொறுப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலையும் வரும். எந்த சூழ்நிலையிலும் நாம் கட்சிக்கு விசுவாசமாக செயல்பட வேண்டும்.

கூட்டத்திற்கு ஒரு தொகுதிக்கு ஆயிரம் இளைஞர்களை அழைத்து வர வேண்டும். கண்டிப்பாக அவர்கள் வெள்ளை உடை அணிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பேசுகையில், "முதன்முதலாக தென்காசிக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாகமான வரவேற்பு அளிப்போம். ஏராளமான தொண்டர்கள் திரண்டு வரும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன" என்றார்.

கலந்துகொண்டவர்கள்

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஆறுமுகசாமி, முத்துப்பாண்டி, ஷேக் தாவூது, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, மாவட்ட துணைச் செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், சீனித்துரை, இளைஞர் அணி அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜா, முகேஷ், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான சாதிர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்