நம்பியூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து தென்காசியில் இருந்து வந்த குறுஞ்செய்தி; வாகன உரிமையாளர் அதிர்ச்சி
நம்பியூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து தென்காசியில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.;
நம்பியூர்
நம்பியூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து தென்காசியில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலையபாளையம் பெரியசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் வீட்டிலேயே தையல் எந்திரங்கள் வைத்து ஆடைகள் தைத்து விற்பனை செய்து வருகிறார். மேலும் இவர் தனது சொந்த வேலைக்காக ஆம்னி வேன் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். இதனை தனது வீட்டு முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில் ரமேஷ்குமார் செல்போனுக்கு நேற்று முன்தினம் மதியம் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) ஒன்று வந்துள்ளது. அதனை ரமேஷ்குமார் திறந்து பார்த்தார். அப்போது அதில் அவருடைய TN76Y6603 என்ற எண் கொண்ட ஆம்னி வேனுக்கு ரூ.1,500 அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அபராதம்
உடனடியாக குறுஞ்செய்தியில் வந்த சலான் எண்ணை வைத்து ஆன்லைனில் அபராதம் குறித்த அறிக்கையை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். அப்போது அதில், ரமேஷ்குமாரின் TN76Y6603 எண் கொண்ட இருசக்கர வாகனத்துக்கு தென்காசி மாவட்ட போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1,000-மும், ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ்களை போக்குவரத்து போலீசாரிடம் காண்பிக்காததற்கு ரூ.500-ம் என மொத்தம் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத்தொடர்ந்து அவர் ஆன்லைனிலேயே தென்காசி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு 'திடீரென்று செல்போனுக்கு வந்த அபராத குறுஞ்செய்தியால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன். எனவே தனது 4 சக்கர வாகனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகாரிகள் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தகவல் அனுப்பியுள்ளார்.