பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து
கூடலூரில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 ஆயிரம் பொருட்கள் எரிந்து நாசமானது.
கூடலூர்
கூடலூரில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 ஆயிரம் பொருட்கள் எரிந்து நாசமானது.
பழைய இரும்பு கடை
கூடலூரில் இருந்து தேவர்சோலை வழியாக சுல்தான்பத்தேரிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதன் ஓரத்தில் உசைன் என்பவருக்கு சொந்தமான கடைகள் உள்ளது. இதில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கும் ஒரு கடை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைத்திருந்த இடத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.
கொழுந்துவிட்டு எரிந்த தீ
பின்னர் சிறிது நேரத்தில் அதில் இருந்து மளமளவென தீ பரவ தொடங்கியது. இந்த தீ, கொழுந்து விட்டு பயங்கரமாக எரிந்தது. மேலும் அருகில் இருந்த கடைகளுக்கும் தீ பரவியது. மேலும் தீயின் தாக்கம் அதிகரித்தால், அங்கு கிடந்த பழைய பாட்டில்கள் பட்டாசு போன்று வெடித்து சிதறின. இதை கண்ட வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கூடலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. இது தவிர அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் காலியாக தொடங்கியது. உடனே நகராட்சி லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு வாகனத்தில் நிரப்பப்பட்டது. தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் போராடிய வீரர்கள், அதன்பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விசாரணை
அதன்பிறகே சாலையில் போக்குவரத்து சீரானது. முன்னதாக கூடலூர் தாசில்தார் சித்தராஜ், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது யாராவது தீ வைத்து விட்டு சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.