கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
தஞ்சையில் கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
வாலிபரிடம் கஞ்சா
தஞ்சை வண்டிக்காரத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் கார்த்திக் என்ற அப்பாஸ் (வயது 26). இவர் கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சை மகர்நோன்புச்சாவடியில் உள்ள ஒரு வங்கி அருகே பையுடன் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த தஞ்சை கிழக்கு போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் 1½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
4 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு தஞ்சை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி எஸ்.ரவி வழக்கை விசாரித்து கார்த்திக்குக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.