விசாரணைக்கு அழைத்து சென்றபோது போலீஸ் தாக்கியதில் பல் விழுந்ததாக நாடகமாடிய வாலிபர்

சேலத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, போலீஸ் தாக்கியதில் பல் விழுந்ததாக நாடகம் ஆடிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.;

Update: 2023-05-19 22:33 GMT

போலீசார் கண்காணிப்பு

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடந்து வந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சண்முகா நகரை சேர்ந்த வினோத்குமார் (வயது 32) என்பவர் சமீபத்தில் புதிதாக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கியதாகவும், திருடிய பணத்தில் அவர் அதை வாங்கியிருக்கலாம் என்று சிலர் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கண்காணித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்ற வினோத்குமாரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மோட்டார் சைக்கிளை எப்படி வாங்கினீர்கள்? அதற்கு பணம் எப்படி கிடைத்தது? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கடன் பெற்று மோட்டார் சைக்கிளை வாங்கியதாக கூறினார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவரிடம் இருந்து 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த நகை எப்படி வந்தது? என்பது குறித்து அவர் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பல் விழுந்ததா?

வினோத்குமாருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வருகிறது. ஆனால் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது, அவர் போலீசார் வாங்கி கொடுத்த சாப்பாட்டை சாப்பிட மறுத்து விட்டார். பின்னர் மயக்கம் வருவதாக கூறியதால் அவரை போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்களிடம் போலீசார் அடித்ததில் தனது பல் விழுந்துவிட்டதாக வினோத்குமார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா விசாரணை நடத்தினார். அப்போது, வினோத்குமாரை யாரும் அடிக்கவில்லை என்றும், போலீசாரை மிரட்டுவதற்காக தன்னை தாக்கியதாக நாடகம் ஆடுவதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் வினோத்குமாரின் உறவினர்களை போலீசார் வரவழைத்து அவரை, அவர்களுடன் அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணைக்கு அழைத்தால் போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆஜராக வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்