காதல் மனைவியை விட்டு விட்டு 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
காதல் மனைவியை விட்டு விட்டு 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:
காதல் மனைவி
ஓமலூரை அடுத்த காமலாபுரம் ராஜவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் பிரவீன்குமார் (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த குமுதா (24) என்பவரை காதலித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்காட்டில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு காதல் மனைவியுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
கணவன்- மனைவி இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே குமுதா 5 மாத கர்ப்பம் ஆனார். பிரவீன்குமார், மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் குமுதா கர்ப்பமாக இருந்ததால் பெற்றோர் வீட்டுக்கு சென்று வரும்படி கூறி அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
2-வது திருமணம்
குமுதாவும் கணவர் சொல்லுகிறாரே என்று நினைத்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பிறகு பிரவீன்குமார், மனைவியை அழைக்க அவருடைய வீட்டுக்கு செல்லவில்லை.
இதற்கிடையே பிரவீன்குமார், வேறு ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த குமுதா, பிரவீன்குமாரிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு பிரவீன்குமார், அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
கைது
இதுதொடர்பாக குமுதா, ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் காதல் மனைவியை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்த பிரவீன்குமாரை 2 மாதங்களுக்கு பிறகு ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.