பழைய குற்றால அருவியின் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை துணிச்சலாக மீட்ட வாலிபர்...!
பழைய குற்றாலம் அருவியில் தடாகத்தில் தண்ணீரில் தவறி விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் குற்றாலத்திற்கு அதிகபடியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவியில் இன்று நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை ஹரிணி (வயது 4) அருவியின் முன்புறம் தண்ணீர் விழும் பகுதியில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
திடீரென குழந்தை ஹரிணி அருவியின் தண்ணீர் வெளியேறும் இடத்தில் உள்ள துவாரத்தின் வழியாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருந்தாள்.
உடனே அங்கு நின்ற இளைஞர் ஒருவர் குழந்தையை அடித்து செல்லப்படும் இடத்திற்கு துணிச்சலாக சென்றார். அப்போது சிறுமி ஒரு பாறையின் இடுக்கில் பிடித்துக் கொண்டு நின்றாள். அந்த இளைஞர் அங்கு சென்று குழந்தையை தூக்கி கொண்டு மேலே வந்தார்.
பின்னர், அங்கு வந்த பதறியடித்து வந்த அந்த குழந்தையின் தாய், தனது குழந்தை தான் என்று கூறி பெற்றுக்கொண்டார். உடனடியாக அவர்கள் குழந்தையை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவத்தால் பழைய குற்றாலம் அருவி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.