நிலத்தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

நிலத்தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.;

Update: 2023-05-20 20:44 GMT

தொட்டியம்:

கத்திக்குத்து

தொட்டியம் அருகே உள்ள மேல கார்த்திகைபட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி விஜயா(வயது 40). இவரது குடும்பத்திற்கும், அதே தெருவை சேர்ந்த முத்துச்செல்வன்(39), விஜயலட்சுமி(37), ராஜாமணி(62), சுரேந்தர்(21) ஆகியோருக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டுக்கொட்டகைக்கு சென்று விட்டு திரும்பி வந்த விஜயாவை, 4 பேரும் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அப்போது அங்கு வந்த விஜயாவின் மகன் நவீன்குமாரை(19) முத்துச்செல்வன் சிறிய கத்தியால் குத்தியதாக தெரிகிறது. அதை தடுக்க வந்த விஜயாவின் காது மற்றும் கை விரல்களில் கத்தியால் கிழித்து விட்டதாக கூறப்படுகிறது.

8 பேர் மீது வழக்கு

இதில் படுகாயம் அடைந்த நவீன்குமார் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், விஜயா தொட்டியம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விஜயா கொடுத்த புகாரின்பேரில் முத்துச்செல்வன், விஜயலட்சுமி, ராஜாமணி, சுரேந்தர் ஆகியோர் மீது தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதேபோல் விஜயா உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து தன்னை திட்டி, தனது கணவர் முத்துச்செல்வனை நவீன்குமார் தாக்கியதாகவும், தனது மாமியார் ராஜாமணியை விஜயா தாக்கியதாகவும், பிரவீன் கத்தியால் கீறியதாகவும், அதை தடுக்க சென்ற தன்னையும் அவர் கத்தியால் கீறியதாகவும் விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் நவீன்குமார், விஜயா, பிரவீன்(20), நதியா(23) ஆகியோர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்