மறைமலைநகர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு
மறைமலைநகர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் சையது (வயது22), இவர் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் நேற்று இஸ்மாயில் சையத் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் செல்போனை கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் அந்தக்கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் இஸ்மாயில் சையத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர்.
காயமடைந்த இஸ்மாயில் சையத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் செல்போன் பறித்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.