நண்பரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

நண்பரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-24 20:03 GMT

கோவை,

கோவை மாவட்டம் வடமதுரை பி.ஜி.புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வேலை இல்லாமல் இருந்துள்ளனர். இதில் மனைவி நர்சிங் படித்துள்ளார். இவர்களது நண்பர் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை சேர்ந்த தரண் (வயது 19) என்பவரிடம் வேலை இருந்தால் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று போனில் கேட்டுள்ளனர்.  

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிதி நிறுவனத்தில் வேலை உள்ளது என்றும், எனவே நேரில் வரும்படியும் தரண் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து கணவன்- மனைவி இருவரும் கோவையில் இருந்து பஸ்சில் கோபி பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது தரண் அந்த பெண்ணை மட்டும் அலுவலகத்துக்கு அழைத்து செல்வதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார். கோபி அருகே வேட்டைக்காரன் கோவில் கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்திய தரண், யாரும் இல்லாத இடத்துக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக தரண் மிரட்டி உள்ளார்.

இதைத்தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் அழுது கொண்டே அந்த பெண் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுகுறித்து கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தரணை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்