காதல் தோல்வியால் மெரினாவில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
மெரினாவில் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபரை போலீசார் மீட்டு அவருக்கு அறிவுரை கூறி உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4-வது மாடியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ஏறினார். அவர் திடீரென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 'கையில் பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க போகிறேன். என்னை காப்பாற்ற முயன்றால் கீழே குதித்து விடுவேன்' என்று மிரட்டல் விடுத்தபடி இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களும் மாடிக்கு சென்று அவரை காப்பாற்றும் முயற்சியை கையாண்டனர். ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்ற போது, இளைஞர்கள் அவரை பத்திரமாக பிடித்துக்கொண்டனர். அந்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சுனில் (வயது 24) என்பதும், அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. காதல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.