சென்னை கொருக்குப்பேட்டையில் கொள்ளையன் செல்போனை பறித்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

சென்னை கொருக்குப்பேட்டையில் ஓடும் ரெயிலில் கொள்ளையன் செல்போன் பறித்த போது நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் பலியானார். தொடரும் சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2023-01-23 04:36 GMT

செல்போன் பறிப்பு

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கட்டு அருகில் நின்று செல்போனில் பேசியபடி சென்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான விவேக்குமார்(வயது 24) என்பவரிடம் தண்டவாளம் அருகில் நின்ற கொள்ளையன் கம்பால் அடித்து செல்போனை பறித்தான்.

அப்போது நிலைதடுமாறி ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்த விவேக்குமார் காயம் அடைந்தார். அத்துடன் அவரது உடைமைகள், சான்றிதழ்களை ரெயிலில் தவறவிட்டார். இதனால் கதறி அழுத அவருக்கு அந்த பகுதி பொதுமக்கள் உதவினர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே கொருக்குப்பேட்டை பகுதியில் மற்றொரு வாலிபரிடம் செல்போன் பறித்தபோது, ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து அவர் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ரெயிலில் இருந்து விழுந்து சாவு

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோனி சேட் (24). இவர், சென்னை சென்டிரல் நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். சென்னை கொருக்குப்பேட்டையில் அதே பகுதியில் வந்தபோது ரெயில் மெதுவாக சென்றது. ரோனி சேட், ரெயில் பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து செல்போன் பார்த்தபடி வந்தார்.

அப்போது தண்டவாளம் அருகே கீழே நின்று கொண்டிருந்த கொள்ளையன் ஒருவன், திடீரென ரோனி சேட்டின் கையில் இருந்த செல்போனை தாவி பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோனி சேட், செல்போனை பதறியபடி பிடிக்க முயன்றார். இதில் நிலைதடுமாறிய அவர், ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார்.

இதில் தலையில் படுகாயம் அடைந்த ரோனி சேட், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் இதனை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கட்டிட வேலைக்கு வந்தார்

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார், பலியான ரோனி சேட் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலியான ரோனி சேட், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கட்டிட வேலைக்காக சென்னைக்கு வந்தபோது, பலியாகிவிட்டது தெரிந்தது.

சினிமா பாணியில்...

சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் மற்றும் சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிக்னல் காரணமாக கொருக்குப்பேட்டை பகுதியில் மெதுவாக செல்லும். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள், ரெயில் படிக்கட்டில் அமர்ந்தும், நின்றும் பயணம் செய்பவர்களிடம் 'காக்கா முட்டை' சினிமா படபாணியில் கம்பால் அடித்து செல்போன் பறிப்பதும், ரெயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளில் இருந்து நகை, பணம் திருடுவதும் போன்ற குற்றசெயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்களால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தடுக்க ரெயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்