ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
செங்கோட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
செங்கோட்டை:
தாம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவில் செங்கோட்டைக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. நேற்று காலையில் இந்த ரெயில் செங்கோட்டை அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் உள்ள தண்டவாளத்துக்கு வாலிபர் ஒருவர் திடீரென்று சென்று ரெயில் முன் பாய்ந்தார். அவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் உடல் சிதறிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் செங்கோட்டை வல்லம் ரோடு பகுதியைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன் மகன் கார்த்திக் (வயது 33) என்பது தெரிய வந்தது. கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.