குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
கொடுமுடி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.;
கொடுமுடி
கொடுமுடி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
குழந்தை இல்லை
கொடுமுடி அருகே உள்ள பெரிய வட்டத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி யசோதா (வயது 26). இவர் அருகில் உள்ள வெங்கமேடு பகுதியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவனும், மனைவியும் சாப்பிட்டு விட்டு 10.30 மணி வரை பேசி உள்ளனர். பின்னர் யசோதா படுக்கை அறைக்கு சென்று படுத்துள்ளார். மறுநாள் காலை 7.30 மணி ஆகியும் யசோதா படுக்கை அறையில் இருந்து எழுந்து வராததால் லோகேஷ் கதவை நீண்ட நேரமாக தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் மேற்கூரையில் ஏரி ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி பார்த்தார்.
தூக்குப்போட்டு சாவு
அப்போது யசோதா வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிகொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கிய யசோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 'யசோதா குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது' தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ.வும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமாகி குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.