விருத்தாசலத்தில்தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு21 வாகனங்கள் நிராகரிப்பு
விருத்தாசலத்தில் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது 21 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டதால் நிராகரிக்கப்பட்டன.;
விருத்தாசலம்,
பள்ளி வாகனங்கள் ஆய்வு
விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், பள்ளிக்கல்வித் துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவை சார்பில் பள்ளி வாகனங்கள் கூட்டு தணிக்கை ஆய்வு முகாம் விருத்தாசலத்தில் நடந்தது. இதற்காக விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் தாலுகா பகுதிகளுக்குட்பட்ட 31 தனியார் பள்ளிகளில் இருந்து 250 வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த வாகனங்களை சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், விருத்தாசலம் கோட்டாட்சியர் லூர்துசாமி, விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் துரைபாண்டியன், விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
தணிக்கை சான்றிதழ்
அப்போது அவர்கள், பள்ளி வாகனங்களின் படிக்கட்டுகள், ஜன்னல்கள், அவசர வழி உள்ளிட்ட வசதிகள் உள்ளதா? எனவும், வாகனங்களில் தீயணைப்பு கருவி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி, புத்தகங்கள் வைக்கும் அலமாரிகள், முதலுதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், பிரதிபலிப்பான் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்து, தணிக்கை சான்றிதழ் வழங்கினர்.
மேலும் ஆய்வின் முடிவில் 21 வாகனங்களில் பல்வேறு குறைகள் கண்டறிப்பட்டதால், தகுதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த வாகனங்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகு ஆய்வு செய்யப்பட்டு, தகுதி சான்றிதழ் வழங்கப்படும் என என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து தீவிபத்து ஏற்பட்டால், அதனை அணைப்பது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் பள்ளி வாகனங்களின் டிரைவர்கள், உதவியாளர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.