காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய ஆசிரியை பாலியல் பலாத்காரம்: போதை ஆசாமி வெறிச்செயல்

கூச்சலிட்டால் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று போதை ஆசாமி மிரட்டியுள்ளார்.;

Update:2024-05-09 11:15 IST

சென்னை,

சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவரது கணவர் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட வெளியே சென்று விடுவதால் இளம்பெண் வீட்டில் மகள்களுடன் இரவில் தனியாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது போதை ஆசாமி ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சலிட முயன்றுள்ளார். ஆனால் கூச்சலிட்டால் பெண் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று அந்த நபர் மிரட்டியுள்ளார்.

பின்னர் கத்திமுனையில் அந்த பெண்ணை போதை ஆசாமி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஒட முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போதை ஆசாமியை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி தர்மஅடி கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதையில் பலாத்காரத்தில் ஈடுபட்ட கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஜான் பால்ராஜ் (38) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்