14 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத ஆசிரியர்
ஜெயங்கொண்டம் அருகே கடந்த 14 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.;
அறிவியல் ஆசிரியர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செங்குட்டுவன் (வயது 56). இவர் கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்துள்ளார். மேலும், பள்ளி மாணவர்களின் நலனை கருதி சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் பாடம் நடத்தி வருகிறார்.
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக நடு நிலைப்பள்ளியில் தனியே ஓர் அறிவியல் ஆய்வகம் அமைத்துள்ளார். மேலும், பள்ளி வளாகத்தில் மூலிகை மற்றும் காய்கறித்தோட்டம் அமைத்துள்ளார். இதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகளை பள்ளியின் சத்துணவு திட்டத்திற்கு வழங்கியுள்ளார்.
விஞ்ஞானிகளுடன் உரையாடல்
5 மாவட்டங்களை சேர்ந்த 17 கலெக்டர்களிடம் இருந்து 50 முறை தனது மாணவர்களை பரிசுகள் மற்றும் பாராட்டுகளை பெற வைத்துள்ளார். மேலும், தனது மாணவர்களை 2 முறை டாக்டர் அப்துல்கலாம் மற்றும் இஸ்ரோ, நாசா, தேசிய அளவிலான இயற்பியல் விஞ்ஞானிகளுடன் உரையாட வைத்துள்ளார். அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் தங்கப்பதக்கம், அறிவியல் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து தேசிய அளவில் குழந்தை விஞ்ஞானி விருதை பெற்றும் இவரது மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதுமட்டுமின்றி பேச்சு, கட்டுரை, ஓவியம், தடகள போட்டிகள், வினாடி-வினா போட்டிகள், நாடகம், நாட்டியம், சதுரங்கம், யோகா, தேசிய திறனாய்வு தேர்வுகள், துளிர் திறனாய்வு தேர்வுகள் போன்ற அனைத்து போட்டிகளிலும் மாணவர்களை கலந்து கொள்ள செய்து விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அப்துல்கலாம் விருது
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, தமிழக அமைச்சர்கள், தமிழக கவர்னர், கல்வித்துறை முதன்மை செயலர்கள் ஆகியோர்களிடம் இவரது மாணவர்கள் நேரில் பாராட்டும், பரிசுகளும் பெற்றுள்ளனர். சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கு சென்று தேசிய அளவில் மாணவர்களை பரிசு பெற செய்துள்ளார். இவரிடம் பயின்ற மாணவர்கள் குழந்தை விஞ்ஞானி, மாணவன் புரட்சியாளர், மாணவ மணி விருது, நாளைய கலாம் விருது, வருங்கால பசுமை காவலர், மிளிரும் மாணவர் விருது, அப்துல்கலாம் விருது, வானவில் மன்ற அறிவியல் கண்காட்சி போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று அயல்நாட்டு கல்வி பயணம் மேற்கொண்டு உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு இவரது மாணவர்கள் சிறுதானியங்கள் பற்றிய ஆய்வின் அடிப்படையின் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்ற முடிவை பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை திட்ட அறிக்கையாக சமர்ப்பித்தனர். தற்போது மத்திய அரசு இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டு என அறிவித்திருப்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த மாபெரும் கவுரவம் ஆகும்.
விருதுகள்
தமிழக அரசு மற்றும் கல்வித்துறை, இஸ்ரோ விஞ்ஞானி, கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை, லயன்ஸ் ரோட்டரி போன்ற பல்வேறு சங்கங்கள் மூலமாக 15-க்கும் மேற்பட்ட விருதுகளை ஆசிரியர் செங்குட்டுவன் பெற்றுள்ளார். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையிடம் லட்சிய ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரியும் அறிவியல் ஆசிரியர் ஆவர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர் தனது பணிக்காலம் முடியும் வரை மாணவர்களுக்காக தன் கல்வி பணியை அர்ப்பணிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.