கிராமசபை கூட்டத்தில் திடீர் சலசலப்பு
வரவு-செலவு கணக்கில் முரண்பாடு கிராமசபை கூட்டத்தில் திடீர் சலசலப்பு
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட பாசார் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அனுஜாசுப்ரமணியன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் மேற்பார்வையாளராக இருந்தார். ஊராட்சி செயலாளர் சந்திரலேகா வரவு-செலவு கணக்கை வாசித்தார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் வரவு-செலவு தொகைக்கும், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்குக்கும் வேறுபாடு இருப்பதாகவும், பல்வேறு திட்டங்களின் செலவின தொகை குறித்தும் கேட்டனர். இதற்கு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் தெரிவித்த பதில் திருப்தி இல்லை என்பதாக கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாகவும், சரியான பதிவேடுகள் இல்லாததால், கலெக்டர் தலைமையில் வேறு தேதியில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலறிந்து வந்த ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன் மற்றும் உதவி திட்ட இயக்குனர் அன்னப்பூரணி ஆகியோர் கோஷம் எழுப்பியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.