பொதுமக்கள் திடீர் போராட்டம்
தென்காசியில் பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
தென்காசி கீழ வாலியன் பொத்தை பகுதியில் நீண்ட நாட்களாக சாலை வசதி செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி பகுதியில் நேற்று சாலை பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு சாலை பணியை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "ஏற்கனவே இலவச வீட்டு மனை பட்டா வாங்கி சில குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் நீண்ட நாட்களாக சாலை போடப்படாமல் உள்ளதாகவும், இந்த நிலையில் ஏற்கனவே சாலை நன்றாக உள்ள இடத்தில் மீண்டும் சாலை பணி நடப்பதாகவும் கூறினார்கள்.
தகவல் அறிந்ததும் தென்காசி நகராட்சி என்ஜினீயர் ஜெயப்பிரியா அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் சமரசம் அடையவில்லை. அதன் பிறகு போலீசார் வந்து அவர்களிடம் பேசி காலையில் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று இதுகுறித்து கூறுங்கள் என்று சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.