கலெக்டர் அலுவலக வளாகத்தில் கர்ப்பிணி திடீர் தர்ணா
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கர்ப்பிணி திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
தர்ணா
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு கொடுக்க வந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பஷீரா பானு என்பவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
தான் 8 மாத கா்ப்பமாக இருப்பதாகவும், திருமணம் செய்த பின் கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும், சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அழைத்து சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த கலெக்டர் அறிவுறுத்தினார்.
தார்சாலை வசதி
ஆலங்குடி அருகே வெள்ளக்கொல்லை, புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். இதில் அரைப்பட்டியிலிருந்து கீழையூர் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதாகவும், புதிய தாா் சாலை அமைக்க அறிவிக்கப்பட்டும், பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதாகவும், புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க கோரியும், இல்லையெனில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையை சேர்ந்த சுனிலா என்பவர் தனது 2 மகள்களுடன் வந்து அளித்த மனுவில், தனது கணவர் ஆரோக்கியசாமியை கடந்த ஒரு மாதமாக காணவில்லை எனவும், போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவும், தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனு அளித்தார்.
530 மனுக்கள்
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 530 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.