நண்பர்களுடன் கடலில் விளையாடிய மாணவன் ராட்சத அலையில் சிக்கி பலி
நாகை அருகே நண்பர்களுடன் கடலில் விளையாடிய மாணவன், ராட்சத அலையில் சிக்கி பலியானான்.
நாகை அருகே நண்பர்களுடன் கடலில் விளையாடிய மாணவன், ராட்சத அலையில் சிக்கி பலியானான்.
பள்ளி மாணவன்
நாகை கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவில் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் கவுசிகன்(வயது 14). கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சவுசிகன் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் நாகை அருகே கல்லார் பகுதியில் கடலில் இறங்கி விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது எழுந்த ராட்ச அலை 3 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது.
2 பேர் மீட்பு
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 சிறுவர்களை மீட்டனர். ஆனால் கவுசிகனை அலை கடலுக்குள் இழுத்து சென்று விட்டது. இதுகுறித்து நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவன் கிடைக்கவில்லை.
உடல் கரை ஒதுங்கியது
இந்த நிலையில் கவுசிகன் உடல் அதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவனின் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8-ம் வகுப்பு மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.