நத்தத்தில் வினோத நோயால் அவதிப்படும் மாணவி; மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டுகோள்

நத்தத்தில் வினோத நோயால் அவதிப்படும் மாணவி, மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-03-27 20:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள சென்ட்ரல் சினிமா தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 44). மாற்றுத்திறனாளியான இவர், தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவுரி (36) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில், 2-வது மகள் பவிஷா (11). இவர் நத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பவிஷா பிறப்பில் இருந்தே இடதுகாலில் 'பிரைமரி நிப்போட்டிமா' என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகிறார். அதாவது அவரது இடது காலின் பாதத்தில் இருந்து இடுப்பு வரை ஒருவிதமான வீக்கம் ஏற்பட்டு வந்தது. தற்போது அதன் வீக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்காக அவரது பெற்றோர், தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். ஆனால் பவிஷாவுக்கு கால்வீக்க நோய் சரியாகவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பவிஷாவின் பெற்றோர், கடந்த மாதம் அவரை சென்னையில் உள்ள ஒமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனாலும் கால்வீக்க நோய் சரியாகவில்லை. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் அமெரிக்காவில் இருந்து உயர்ரக மருந்துகளை கொண்டு வரவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், எங்களது மகள் படிப்பில் புத்திசாலி. பேச்சு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வெற்றிபெற்று பரிசுகளை வாங்கியுள்ளாள். ஆனால் அவளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பை குணமடைய போராடி வருகிறோம். ஆனால் வெளிநாட்டில் இருந்து உயர்ரக மருந்துகளை வாங்கிவர செலவு அதிகமாக இருக்கும் என்பதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே தமிழக அரசு, எங்களது மகளுக்கு சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்