வீட்டு சிறையில் இருந்து தப்பி சுவர் ஏறி குதித்து காதலனை கரம் பிடித்த மாணவி

வீட்டு சிறையில் இருந்து தப்பி சுவர் ஏறி குதித்து காதலனை மாணவி கரம் பிடித்தார்.;

Update: 2023-06-21 23:18 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் சென்னித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா (வயது 21). பக்கத்து ஊரான கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (24). வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கும் இடையே பள்ளிக்கூடத்தில் படித்தபோது காதல் மலர்ந்தது.

பள்ளி படிப்பை முடித்த பிறகும் இந்த காதல் தொடர்ந்தது. ராதிகா கருங்கல் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே சமயத்தில் காதலன் அனீஷ் 10-ம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டார்.

பின்னர் வெளிநாட்டுக்கு சென்று எலக்ட்ரீசியனாக வேலை பார்த்தார். எனினும் அவர் செல்போன் மூலம் ராதிகாவிடம் காதலை வளர்த்தார்.

பெற்றோர் எதிர்ப்பு

இந்தநிலையில் காதல் விவகாரம் இருவருடைய பெற்றோருக்கும் தெரிய வந்தது. இந்த காதலுக்கு ராதிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை மணமுடிக்கக்கூடாது என மகளிடம் கெடுபிடி காட்டினர். ஒரு கட்டத்தில் நீ படித்து கிழித்தது போதும் என கூறி ராதிகாவை மேற்கொண்டு படிக்க அனுமதிக்காமல் வீட்டிலேயே சிறை வைத்தனர்.

அதே சமயத்தில் அவருக்கு அவசர, அவசரமாக மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இனியும் தாமதித்தால் தன்னை காதலனிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என கருதிய ராதிகா, காதலன் அனீஷை தொடர்பு கொண்டு பேசினார்.இங்குள்ள விவரத்தை கூறிய அவர் வெளிநாட்டில் இருந்து உடனடியாக புறப்பட்டு வந்து தன்னை திருமணம் செய்யும்படி வலியுறுத்தினார்.

சுவர் ஏறி குதித்து ஓடிய காதலி

அதன்படி காதலன் அனீஷ் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பிறகு வீட்டில் சிறை வைத்த காதலியை மீட்டு எங்கு வைத்து திருமணம் செய்வது என நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டார். மேலும் காதலியிடமும் செல்போனில் பேசிய அவர் வீட்டை விட்டு எப்படியாவது வெளியே வந்து விடு, பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் என நம்பிக்கையை ஊட்டினார்.

இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வது போல் பாசாங்கு செய்த ராதிகா, வீட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்தார். பிறகு அங்கு தயாராக மோட்டார் சைக்கிளில் நின்ற காதலன் அனீசுடன் தப்பி சென்று விட்டார்.

போலீசில் தஞ்சம்

தொடர்ந்து நண்பர்களுடன் சென்ற காதல் ஜோடி கரவிளாகம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே ராதிகாவின் பெற்றோர் தன்னுடைய மகளை அனீஷ் கடத்திச் சென்று விட்டதாக மார்த்தாண்டம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.

இதனை அறிந்த காதல் ஜோடி நேற்று மாலையும், கழுத்துமாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது எங்களுடைய காதலில் உறுதியாக இருக்கிறோம், சேர்ந்து வாழப் போகிறோம் என போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் சேர்ந்து வாழ போலீசார் அனுமதித்தனர். இதனால் பெற்றோர் சோகத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்