மதுரை ஆரப்பாளையம் அருகே அதிவேகத்தில் வந்த கார் மோதி பாட்டி-பேரன் பலியான பரிதாபம்- தறிகெட்டு ஓடி மோதியதில் 2 சிறுவர்களும் படுகாயம்

அதிவேகத்தில் வந்த கார் மோதி பாட்டி, பேரன் உயிரிழந்தனர். அந்த கார் தறிகெட்டு ஓடி மோதியதில் 2 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். அந்த காரின் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.;

Update: 2023-02-18 20:09 GMT


அதிவேகத்தில் வந்த கார் மோதி பாட்டி, பேரன் உயிரிழந்தனர். அந்த கார் தறிகெட்டு ஓடி மோதியதில் 2 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். அந்த காரின் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

பாட்டி-பேரன்

மதுரை வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி(வயது 60). இவருடைய பேரன் ஆகாஷ் (13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் சுப்புலட்சுமியும், அவருடைய பேரன் ஆகாசும், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள், பொருட்கள் வாங்கிக் கொண்டு ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டுத்தோப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென அவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சுப்புலட்சுமி, ஆகாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நிற்காமல் தறிகெட்டு ஓடிய அந்த கார், அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பிரபாகரன்(13), முத்துக்குமார்(15) ஆகியோர் மீதும் வேகமாக மோதியது. இதனால், அந்த 2 சிறுவர்களும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

2 சிறுவர்கள் படுகாயம்

உடனே அக்கம்பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். இதற்கிடையே, காரை ஓட்டிவந்த அந்த நபர், காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த 2 சிறுவர்களையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து அறிந்த கரிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்