குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம்

கோத்தகிரியில் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.;

Update: 2023-03-05 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

ஊட்டச்சத்து பெட்டகம்

கோத்தகிரி அருகே உள்ள கைத்தளா பகுதி அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தினை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கி தாய்மார்களுடன் கலந்துரையாடினார். பின்னர் கலெக்டர் அம்ரித் பேசுகையில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு மே மாதம் ஊட்டச்சத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்குதல் மற்றும் பிறப்பு எடை குறைவாக உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கண்காணிப்பு அட்டைகள்

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட கைத்தளா அங்கன்வாடி மையத்தில் இன்று(அதாவது நேற்று) இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 தாலூகாக்களில் 6 மாத குழந்தைகளில் 859 குழந்தைகள் பிறப்பு எடை குறைவாக உள்ளதாகவும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளில் 1,453 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களின், தாய்மார்களுக்கு கண்காணிப்பு அட்டைகள் வழங்கப்பட்டு, பிரதி மாதம் எடை, உயரம் எடுக்கப்பட்டு குழந்தைகளின் உடல்நிலை முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஒரு மாதத்திற்கு தேவைப்படும் அளவிலும், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ உணவு 56 நாட்களுக்கு தினசரி ஒரு நேரத்திற்கு உண்ணும் வகையிலும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷ்ணகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்