தாமிரபரணியை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

தாமிரபரணியை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.;

Update: 2023-06-03 18:58 GMT

தாமிரபரணியை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.

நிர்வாகிகள் சந்திப்பு

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி, நெல்லையில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. நெல்லை மண்டல தலைவர் ஜூல்பிகர் அலி தலைமை தாங்கினார். மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆயுள் சிறைவாசிகள்

ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ் வாழும் காலம் வரையிலும் அவரது புகழ் நீக்கமற நிறைந்து இருக்கும்.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது இஸ்லாமிய சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.

பெண் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல், தேசிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை காப்பாற்ற முனையும் பா.ஜனதா அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தாமிரபரணியை பாதுகாக்க...

வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் இன்றைய நிலைமை வேதனையளிக்கும் வகையில் உள்ளது. மணல் கொள்ளை, தண்ணீர் கொள்ளையால் அதன் உயிரோட்டம் அழிக்கப்பட்டு விட்டது. கரையோர ஆக்கிரமிப்புகள், கழிவுகள், சாக்கடைகள் மூலம் அதன் பொலிவை இழந்து விட்டது. அந்த நதியை பாதுகாக்க தேவையான சிறப்பு திட்டத்தை அரசு அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்.

கங்கை நதியை பாதுகாக்க தனிக்கவனம் செலுத்தி அதற்கான வேலைகளை செய்து வருகின்ற மத்திய அரசு தாமிரபரணியை பாதுகாக்கவும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகள் அகமது நவவி, சேக் அப்துல்லா, மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் கனி, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர்மஸ்தான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்