உற்பத்தி பொருட்களுக்கான சிறப்பு கண்காட்சி
மகளிர் சுய உதவிகுழுவினர் தயாரித்த உற்பத்தி பொருட்களுக்கான சிறப்பு கண்காட்சியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிகுழுவினர் தயாரித்த உற்பத்தி பொருட்களுக்கான தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர், ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுயமாக தொழில் தொடங்கிடும் வகையில் மானியத்துடன் கூடிய சுழல் நிதி கடனுதவியினை வழங்கி வருகிறார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடனுதவி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் பல்வேறு வகையான கைவினைப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
கைவினைப்பொருட்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழு மூலம் தயாரிக்கப்படும் கைவினைப்பொருட்களை பொதுமக்களும் வாங்கி பயன்பெறும் வகையிலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வருமானத்தை பெருக்கிடும் வகையிலும் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சி அரங்கில் கைவினைப்பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், தரமான வீட்டு உபயோகப்பொருட்கள், ஊறுகாய் வகைகள், நாட்டு மருந்துப்பொருட்கள், அலங்காரப்பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை பொதுமக்கள் அதிகளவில் பார்வையிட்டு தங்களுக்கும் தங்கள் வீட்டிற்கும் தேவையான பொருட்களை வாங்கி பயனடைவதோடு மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.