கட்டிட மேற்கூரையில் சிக்கிய பாம்பு
வத்தலக்குண்டு அருகே கட்டிட மேற்கூரையில் சிக்கி இருந்த பாம்பு பிடிபட்டது.;
வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் 'அ' பிரிவு என்ற இடத்தில் அதே பகுதியை சேர்ந்த தென்னை மட்டைமில் உரிமையாளர் கோபி என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். தற்போது அந்த கட்டிடத்துக்கு மேற்கூரை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று மேற்கூரை அமைப்பதற்காக போடப்பட்ட பலகைகளின் இடுக்கில் ஒரு பாம்பு இருந்தது. இதைப்பார்த்த கட்டிட பணியாளர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடினர்.
பின்னர் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேற்கூரை பலகையில் சிக்கி இருந்த பாம்பை மீட்டனர். பிடிபட்டது 7 அடிநீள சாரைப்பாம்பு ஆகும். அதனை வனத்துறையினரிடம் தீயணைப்புத்துறையினர் ஒப்படைத்தனர்.