தமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு- முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரியில் உரிய நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு முற்றுகை போராட்டம் நடந்தது.;

Update:2023-10-12 00:15 IST

கடையடைப்பு

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் ஆகியவை காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மயிலாடுதுறை நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடி கிடந்தது.

குறிப்பாக எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் காந்திஜி சாலை, பட்டமங்கலத் தெரு, டவுன் எக்ஸ்டென்ஷன், கச்சேரி சாலை உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. மருந்துக்கடைகள், பழக்கடைகள், பால் விற்பனையகம் போன்ற அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஆனாலும் நகரில் பொதுமக்களில் நடமாட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

முற்றுகை போராட்டம்

காலை 11 மணி அளவில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆடுதுறை முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் கல்யாணம், ஜெகவீரபாண்டியன், அருள்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பின்னர் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக நகரில் போக்குவரத்துகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்