கோத்தகிரி அருகே தொடர் அட்டகாசம்: கரடியை பிடிக்க கூண்டு வைப்பு-வனத்துறையினர் நடவடிக்கை

கோத்தகிரி அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கரடியை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-07-07 12:47 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கரடியை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

தொடர் அட்டகாசம்

கோத்தகிரி அருகே உள்ள கொட்டநள்ளி கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொடர்ந்து உலா வந்த வண்ணம் இருந்தது.

மேலும் அந்த கரடி அங்குள்ள ஜானகி என்பவரின் மளிகை கடையை 2 முறை உடைத்து கடைக்குள் சென்று அங்கிருந்த உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தி விட்டு சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று முன் தினம் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

வனத்துறையினர் கண்காணிப்பு

வனத்துறை அதிகாரிகள் உடனடியாக கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தைத் கைவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கொட்டநள்ளி கிராமப் பகுதியில் கரடி நடமாட்டம் உள்ள சாலையோரம் கரடியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து நடவடிக்கை எடுத்தனர். அந்த கூண்டிற்குள் கரடிக்கு பிடித்தமான பழ வகைகள் வைக்கப்பட்டன.

மேலும் அந்தப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்